வெள்ளி, 1 அக்டோபர், 2010

ஆகாய வல்லூறுகள்
மூவர்ணச் சக்கரங்கள் பூசி வந்து
அரிசி அள்ளி வீசிய போது
அண்ணாந்து கையசைத்து
அகம் மகிழ்ந்து கொண்டாடிய வேளையில்
ஒரு நொடி தானும்
சிந்தித்திலோம்
அவை எம்
மகாத்மாவிற்கு வாய்க்கரிசி ஆகுமென்று.



அசோகச்சக்கரம்
ஈழத்தமிழதில் பாசம் வைத்து
நேசக்கரம் நீட்டுவதாய்
தேடி வந்த போது..
சிங்களத்துக்கு
ஆப்படிப்பதாய் மெச்சி மோந்து
மோட்டுச் சிங்களம்
என்று பேசி
பெருமை கொண்ட போது
கணமும் நினைத்திலோம்
அது எம்
மகாத்மாவிற்கு பாடை கட்டும் என்று.


டிக்சிற்றுகளும் சிங்குகளும்
டாங்கிகள் கொண்டு
அமைதிப்படை என்று
அன்ரனோவ்களில்
புகையடிக்க வந்திறங்கிய போது
பெல்கள் கிலுக்கி வந்த மணிக் ஹெலிகளுக்கும்
பூமாலை போட்டு
வரவேற்ற வேளைகளில்
கனவும் கண்டிலோம்
அவை
எம் மகாத்மாவிற்கு
இறுதி மாலை ஆகும் என்று.


1987
செப்டம்பர் திங்கள் 15 முதல்
அந்தத் தியாக வேள்வியில்
நல்லூர் வீதிகள் எங்கனும்
காற்றும் கூட மெளனித்தது
அவன் உயிர் வாடிய போது
ஆனால்..
பஞ்சசீலத்தின் பேரன்
இந்திரா பெற்ற புதல்வன்
சோனியா மாலை சூடிய முதல்வன்
ராஜீவின் ஜீவன் மட்டும்
எக்காளமிட்டுக் கொண்டிருந்தது..!


12 தினங்கள்
எங்கள் மகாத்மா
ஒரு துளி நீரும் இன்றி
துடி துடித்த போதும்
ராஜீவின் உள்ளம் மட்டும்
வகை வகை வைன்கள்
உள்ளே தள்ளி
குதூகலித்துக் கொண்டிருந்தது.



அண்ணன் திலீபன்
உயிர் பிரிந்த
அந்த செப்டம்பர் 26 இன்
நொடிகள் கண்டு
கடிகாரங்கள் கூட
ஒரு கணம்
மெளனித்து முழங்கின..
அவன் சொன்ன இறுதி வார்த்தைகளை..
"தமிழீழம் மலர்வதை
நான் விண்ணிருந்து பார்த்து மகிழ்வேன்"
என்று.


செவிடன் காதில் ஊதிய
சங்காய் அவை அன்று
பாரதத்தார் செவிகளில்..!
இன்றோ..
ஈனத்தமிழர்கள்
எல்லோரும்
செவிடர்களாய்
மகாத்மாவின் இலட்சியம்
கூட சுமக்க மறந்தவர்களாய்
அந்நிய மோகத்துள்
தமது சுகங்களுக்காய்
தியாக தீபம் தியாகி அவனையே
விலை கூறி விற்றபடி..!


திலீபனே
மகாத்மாவே...
ஜேசுவை சிலுவையில்
ஏற்றிய பாதகத்திலும்
கொடியது
ஒரு சொட்டு நீர் கூட
பருக விடாது
உன்னை விண்ணேக வைத்தது.
அதிலும் கொடியது
உன் தியாகத்தை மறந்து
உயிர் வாழும்
பேடிகள் வாழ்வு..!
உணரட்டும்
அந்த நன்றிகெட்ட
ஜென்மங்கள்
வீழட்டும் அதுகளின்
எதிரிக்கு
இனத்தையே
அடிமை சாசனம் எழுதத்
துணிந்து விட்ட
எண்ணங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக