புங்குடுதீவு மண் ஈன்றெடுத்த இந்து மகேசின் பூவரசு பற்றிய செய்தி
-----------------------------------------------------------------------------------
பூவரசு நூறாவது சிறப்பிதழ்
எழுதியவர்: சோழியான்
திங்கள், 29 தை 2007
வெளிவந்துவிட்டது பூவரசு இனிய தமிழ் ஏட்டின் நூறாவது இதழ். ஜேர்மனி, பூவரசு கலை இலக்கியப் பேரவையின் வெளியீடான 'பூவரசு' நூறாவது இதழில், 'எதிர்ப்படும் தடைகளைக் கடந்து இந்தப் பயணத்தை மேலும் இலகுவாக்குவதற்கு உங்களால்மட்டுமே இயலும். உங்கள் அன்பும் ஆதரவும் தொடரும்வரை பூவரசு இன்னும் பல தமிழ்ப் பூக்களைப் பூத்துச் செழிக்கும்' என்ற ஆசிரியர் இந்துமகேஷ் அவர்களின் முகவுரையானது, 'பூவரது தொடர்ந்து வருமா வராதா' என்ற என்ற வாசகர்களதும் படைப்பாளிகளதும் சந்தேகத்தைப் போக்கும்வண்ணம் உள்ளமை மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும்.
ஊடகங்களின் வளர்ச்சி, இணையத்தின் வீக்கம், சூழலின் தாக்கம் எனப் புகலிடத் தமிழர்களது நேரங்கள் சுமைகளாகக் கழியும்போதும், பதினாறு வருடங்களாக புகலிடத் தமிழ் இலக்கியப் பரப்பில் தனக்கென்றொரு தரமான இடத்தைத் தக்கவைத்தவாறு, புதிய படைப்பாளிகளையும் கலைஞர்களையும் அறிமுகப்படுத்தி வந்ததோடு, ஏற்கெனவே அறிமுகமாகிய படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் களமமைத்து அவர்களையும் உற்சாகப்படுத்தி, சிறுவர்களையும் தமிழால் வளைத்திழுக்கும் பூவரசானது நூறாவது இதழை எட்டிப்பிடித்திருப்பதானது, இந்துமகேஷ் என்பவரது தனிமனித சாதனையே என்றால் மிகையாகாது.
வாசகமலர்கள் பகுதியை கவனித்தால், 'எனது எழுத்துறவுக்கே அத்திவாரமிட்ட தாயேடு அல்லவா இந்த நற்றமிழ் ஏடு?' என விஜயா அமலேந்திரன் அவர்கள் மெய்சிலிர்க்க, லண்டனில் இருந்து த.சு.மணியம் அவர்கள் 'புலம்பெயர்ந்த மண்ணில் பல படைப்பாளிகளை வளர்த்துவிட்ட பெருமை பூவரசுக்குண்டு' என மெய்பகர, 'தாய்மண்ணின் வாசத்தோடு தரமான சஞ்சிகையாக தொடர்ந்து வரும் பூவரசு' என சுவிஸிலிருந்து ஏ.ஜே.ஞானேந்திரன் அவர்கள் பாராட்ட, ஜேர்மனியிலிருந்து நகுலா சிவநாதன் அவர்கள் 'ஆவரசாக ஒளிர்ந்து நாவரசாக நல்ல தமிழ் வளர்க்கும் பூவரசே, பாவரசெடுத்து வாழ்த்துகின்றேன்' என வாழ்த்துகிறார். இப்படி வாச(க)மலர்களின் வாழ்த்துக்கள் வளர்ந்து செல்கின்றன.
இதுவரை வெளிவந்த பூவரசின் 99 இதழ்களின் பார்வையில் திருமதி புஷ்பராணி ஜோர்ஜ் நடந்து செல்ல, 'அழகும் ஆபத்தும்' என சிந்தைக்கு தீனி தருகிறார் ஏ.ஜே.ஞானேந்திரன். 'என்னோடு பூவரசு' என மட்டுவில் ஞானக்குமாரன் அகமகிழ, 'பற்றும் வரவும்' என கோசல்யா சொர்ணலிங்கம் புகலிடத் தமிழ் இலக்கியத்துக்கு தரமான வரவொன்று தர, த.சு. மணியம் வாழும் வழி சொல்ல, 'இணைய இதழா, அச்சுப் பதிப்பா சிறந்தது?' என சந்திரவதனா செல்வகுமாரன் நிஜங்களின் பக்கம் அழைக்க, 'பாதை தெரிந்திருந்தால் பயணம் இலகுவாகும்' எனச் சிந்தனைச் செல்வர் எழிலன் உற்சாகப்படுத்த, 'குழந்தைகளின் ஆளுமையை வளர்ப்பது எப்படி?' என நகுலா சிவநாதன் பாதை காட்ட அழைக்க, 'அன்புப் பிணைப்பை' பகீரதி சுதேந்திரன் முன்வைக்க, நடுவே 'எங்கள் இளந்தளிர்கள்' கண்சிமிட்டி நிற்கின்றன. 'தேடுங்கள்' என திருமதி பு. சண்முகரத்தினம் விழிக்க, 'இருப்பவையும் இழப்பவையும்' என செ.பவானி விபரிக்க, 'பருந்துகள் பறக்கும் தேசத்தை' கொண்டு வருகிறார் என்.கே. மகாலிங்கம். 'சலிப்பு எதற்கு?' என மீண்டும் இந்துமகேஷ் அவர்கள் கேட்க, 'அம்மாவுக்குத் தெரிந்தது' என்று கதை சொல்கிறார் சந்திரவதனா செல்வகுமாரன். 'சொல்லமாட்டன்' என இராஜன் முருகவேல் அடம்பிடிக்க, 'சிரித்து வாழவேண்டும்' என்றவாறு டாக்டர் எவ்.ஆர். காப்மேயர் வர, 'உயர்வது எக்காலம்?!' என்ற ஆக்கத்தோடு பரம. விசுவலிங்கம். 'எங்கும்' என அம்பலவன் புவனேந்திரன் கவிதைச் சுவைக்குள் அமிழ்த்த, 'ஆசை'பற்றி இரா. சம்பந்தன் பகுத்தளிக்க, 'எங்கே வைத்தீர்கள் அடைவை' என்ற கேள்வியோடு மட்டுவில் ஞானக்குமாரன். வேதா இலங்காதிலகம் 'தனித்துவம் மறந்த நிலை' கூற, செளம்யன் 'யாழ்ப்பாண நூலகக் கனவுகளை' எம்முன்னே பரப்புகிறார்.
நூறாவது இதழின் பின்புற அட்டையில், விரைவில் 'புதிய பூக்கள்' எனும் இளையோர்க்கான புதிதாய் மலரும் இதழ், பூவரசு கலை இலக்கியத் தோட்டத்தில் இருந்து என்ற அறிவித்தல், பூவரசின் சுறுசுறுப்பான அடுத்த பாய்ச்சலுக்கு கட்டியம் கூறுவதோடு, இளையோர்களின் தமிழ் ஆர்வத்துக்கு ஊக்கமளிக்கப் போகிறது என்பதையும் நினைக்கும்போது, பூவரசு இலக்கியப் பேரவைக்கு வாழ்த்தும் நன்றியும் கூறாமலிருக்க முடியாது.
அதுமட்டுமா?
பூவரசின் இலக்கியப் பரப்பில் வாசகராகவோ படைப்பாளிகளாகவோ ஒவ்வொருவரும் பங்காற்றுவதன் மூலமாகவே, பூவரசிடமிருந்து மேன்மேலும் பலவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதும் உண்மைதானே?!
தொடர்புகளுக்கு:
Poovarasu,
Postfach 103401,
28034 Bremen,
Germany.
poovarasu_germany@hotmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக