வெள்ளி, 1 அக்டோபர், 2010

வவுனியா முகாமிலிருந்து ஒரு சனநாயக தமிழ்கட்சி ஒன்றிடம் பெருந்தொகை பணம் கொடுத்து வெளியே எடுத்து தற்சமயம் இந்தியவில் வந்து தங்கியிருக்கும் போராளியாகவிருந்த எனது சகோதரியிடம் தொலை பேசியில் கதைத்தபின்னர் எழுதியது..

வளைய முட்கம்பிகள்
வற்றியொடுங்கிய
உடலும் முகமும்
வயதையும் வடிவையும்
வைத்து
விடிய விடிய நடக்கும்
விசேட விசாரணைகள்

நாளைய பொழுதாவது
நன்றாய் விடியாதாவென
நாட்களை எண்ணி
புரளும்
நள்ளிரவென்றில்
மப்படித்த சிப்பாயின்
கைகள் என்னை
தட்டியிழத்துப்போகும்

கைத்துவக்கின் அடி
கவட்டுத்துவக்கின் இடி
கசக்கப்படும் முலைகளில் கடி
அடி...இடி...கடி..
அடுத்தடுத்து விசாரித்தில்
அடிவயிற்றில்வலி

மெல்லப்பெய்த மழையில்
மகிழமரத்தில்
மெதுவாய்
சாய்ந்துகொண்டேன்
கால்கள்வழியே
கரைந்தோடிய
கட்டிஇரத்தம்
கண்டதும்
கவலையடைந்தான்
காவலிற்கு நின்ற
சிப்பாய்

அவன் ஆண்மையில்
அவன் சந்தேகப்பட்டு
அவமானமடைந்திருக்கலாம்
ஆனாலும்
யோனிகள் மீதான
விசாரணைகள்
தொடர்ந்து கொண்டேயிருக்கும்..
ஏனெனில் நாங்கள்
தமிழிச்சிகள்

சுபங்களா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக